அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தையில் அமைந்துள்ளது.
திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டுத் தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர். அரக்கர்களுக்காக, தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு, பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க, பெருமாளைக் குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராக ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.
ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்லத் தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம்,”நீ திருமணமாகதாவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது” என்று சொல்லி, அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டித் தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான்.
திவ்யதேச யாத்திரைக்காக வந்ததாகக் கூறினான். அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான். அது வேறு யாருமல்ல. வராகமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி, தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆனபடியால் இத்தலம் “திருவிடவெந்தை” எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி “திருவிடந்தை” ஆனது.
இத்தலத்தை திருமங்கையாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். நித்யகல்யாணப் பெருமாளாக அருள்பாலிக்கும் இத்தலப் பெருமாளின் தாடையில் ஒரு பொட்டு இருக்கிறது. திருஷ்டிப்பொட்டு போல இயற்கையாக அமைந்துள்ளது சிறப்பு. 360 கன்னியரை ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் சூட்டப்பட்டது. 360 கன்னியரில் முதல் கன்னிக்கு கோமளவல்லி என்று பெயர். இங்கு தனி சன்னதியில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, நாமெல்லாம் நாயகி, பெருமாள் ஒருவரே நாயகன் என்பது தான் இக்கோயிலின் தத்துவம். இங்குள்ள பெருமாள் தனது ஒரு திருவடியைப் பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவியின் தலை மீது வைத்துக் கொண்டும், அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கி கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் கல்யாண விமானம். பெருமாளை மார்க்கண்டேயர் தரிசனம் செய்துள்ளார்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
திருமணத்தடை உள்ள பெண்கள் இங்குள்ள தாயாரை வழிபட்டு பலன் பெறலாம்.
திருஷ்டி தோஷம், ராகு கேது தோஷம், சுக்ர தோஷம் , திருமணத்தில் தடை உள்ளவர்களுக்குரிய பரிகாரத் தலம்.