பாட்னா

க்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நாடு முழுவதும் தொடங்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

மத்திய அரசு இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப்பின் நடத்தப்படும் எனக் கூறியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய போது இதைத் தெரிவித்தார்.

பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார்,

”கடந்த 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  இது முதல் முறையாகத் தாமதமாகி உள்ளது. இதற்கு 2024-ம் ஆண்டு தேர்தல் முடியும் வரை எதற்காகக் காத்திருக்க வேண்டும்?

இப்போதே ஏன் தொடங்கக்கூடாது?  உடனடியாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்க வேண்டும். இனி தாமதிக்கத் தேவையில்லை.

நாங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என விரும்பினோம்.  இதை மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே பீகாரில் நாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கிட்டுமசோதாவை செயல்படுத்துவது எப்படி? மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரைகளை அமல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்து அதை உடனடியாக செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்”.

என்று தெரிவித்தார்.