ராம்விலாஸ் பஸ்வானுக்கு விருது: அதிர்ச்சியில் உறைந்த நிதீஷ்குமார்..

குடியரசு தினத்தை யொட்டி பல்வேறு துறைகளில்  சாதனை புரிந்தவர்களுக்கு ’பத்மஸ்ரீ. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற  விருதுகளை மத்தி்ய அரசு அறிவித்துள்ளது.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ராம்விலாஸ் பஸ்வான் மகனும், லோக் ஜன சக்தி  கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் அறிக்கை   வெளியிட்டுள்ளார்.

அதில் ’’ என் தந்தையும், மறைந்த மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானை, அவரது கடைசி மூச்சு இருக்கும் வரை அக்கறையுடன் கவனித்துக்கொண்டவர் ,மோடி. அவரது மறைவுக்கு பின்னரும்,  மரியாதை  கொடுத்துள்ளார் ’’என   சிராக் பஸ்வான் புகழ்ந்துள்ளார்.

ஆனால், பஸ்வானுக்கு விருது அளிக்கப்பட்டிருப்பது , ஐக்கிய ஜனதா தளம் தலைவரும்,,பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து, லோக்ஜனசக்தி போட்டியிட்டது.

இதனால், பல தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் தோற்றுப்போனார்கள்.

பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை எதிர்த்து களம் கண்ட லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனர் பஸ்வானுக்கு பத்மபூஷன் வழங்கி, மத்திய அரசு கவுரவம் செய்திருப்பது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ஆர்.சி.பி.சிங்கிடம் ‘’ பஸ்வானுக்கு விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது’’ விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ‘’ என் பொத்தாம் பொதுவாகப் பதில் அளித்தார்..

-பா.பாரதி.