பாட்னா: தனது கட்சியின் துணைத் தலைவர் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சட்டமன்ற தேர்தல் திட்டமிடல் குழுவில் இணைந்துள்ளதால், எந்த முரண்பாடும் எழவில்லை என்று தெரிவித்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.

மம்தா பானர்ஜி பாரதீய ஜனதா கட்சியின் தீவிரமான அரசியல் எதிரி. ஆனால், நிதிஷ்குமாரோ பீகாரில் பாரதீய ஜனதா கூட்டணியில் இருப்பவர்.

இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டதற்கு, “இதுதொடர்பாக கட்சியின் தேசிய செயற்குழுவில் பிரஷாந்த் கிஷோர் விளக்கமளிக்கவுள்ளார். அவர் கடந்த ஆண்டுதான் எங்களுடைய கட்சியில் சேர்ந்தார்.

அவர் தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனத்துடனும் தொடர்பில் இருக்கிறார். எனவே, அதுதொடர்பாக அவர் யாருடன் இணைந்து பணியாற்றினாலும், அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது” என்றுள்ளார் நிதிஷ்குமார்.

நிதிஷ்குமார் ஏற்கனவே பாரதீய ஜனதாவுடன் மோதல் போக்கில் இருப்பதால், இதுதொடர்பாக எதையும் அலட்டிக்கொள்ள மாட்டார் என்றுதான் ஏற்கனவே நம்பப்பட்டது. அது தற்போது உண்மையாகியுள்ளது. மேலும், அப்படி பிரஷாந்த் கிஷோரை கட்டுப்படுத்த நினைத்தாலும், அவர் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கமாட்டார் என்பதும் வெளிப்படை.