விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் முதல் தலித் பெண்மணி ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.

குண்டூர் மாவட்டத்தின் பிரதிபாடு தனித் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட மேகதோதி சுசாரிதா என்ற தலித் பெண்மணிதான் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளவர்.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும், ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ராஜசேகர ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக சபிதா இந்திரா ரெட்டி என்ற பெண்மணியை முதன்முதலாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவரின் பாணியையேப் பின்பற்றியுள்ள அவரின் மகன், ஒரு தலித் பெண்மணியை உள்துறை அமைச்சராக நியமித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்தவரும் ஜெகன்மோகன் ரெட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முதல் பெண் உள்துறை அமைச்சர் மேகதோதி சுசாரிதா என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெகன்மோகன் அமைச்சரவை உறுப்பினர்களுக்கான இலாகா விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.