பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார் இன்று மாலை மாநில கவர்னரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் சென்றார்.  இதையடுத்து, அங்கு புதிய அரசு  அமையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டுமுதல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சி நடத்தி வரும் கட்சி ஐக்கிய ஜனதாதளம். சமீபகாலமாக பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது. இதனால், நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கொண்ட மகாபந்தன் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதனால், அங்கு கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. சமீபத்தில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் பாஜகவுக்கு தாவினார்.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்ற மகாபந்தன் கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று ஐக்கிய ஜனதாதள கட்சி எம்எல்ஏ, எம்.பி.க்கள் கூட்டம்  நடைபெற்றது. இதில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வது என ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் சவுகானை சந்தித்து, தனது முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். இந்தநிகழ்வின்போது, அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு பதவியேற்கும்வரை காபந்து முதலமைச்சராக நீடிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.