பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிஷ்குமார் மகாபந்தன் கூட்டணியில் இணைய உள்ளதால், அவர்கள் ஆதரவுடன் மீண்டும் கூட்டணி அரசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீகாரில் பல ஆண்டுகளாக  ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி தொடர்ந்து வந்தது.  கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.  ஆனால், ஆர்ஜேடி கட்சியே அதிக அளவிலான வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. ஆனால், பாஜக ஆதரவுடன் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்து, ஆட்சி  நடைபெற்று வந்தது.

ஆனால், சமீப காலமாக மத்திய பாஜக அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு எதிரானது நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள வந்தது. கடந்த சில மாதங்களாக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வந்தது. ஐக்கிய ஜனதா தளத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வந்ததாக பேசப்பட்டது. மேலும், பீகாருக்கான சிறப்புப் பிரிவு அந்தஸ்து தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது போன்ற விவகாரங்கள்  இருகட்சிக்கும் இடையேயான  விரிசலை ஏற்படுத்தி வந்தது.

சமீபத்தில் நடைபெற்ற  விதானசபா நூற்றாண்டு விழாவிற்கு பாஜகவை சேர்ந்த சபாநாயகர், அனுப்பிய அழைப்பிதழில், நிதிஷின் பெயர் இடம்பெறாதது மோதல் போக்கை மேலும், வலுப்படுத்தியது.  அதற்கேற்றால் போல நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் பாஜவுக்கு தாவினார். இதனால், அதிர்ச்சி அடைந்த நிதிஷ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜகவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர். இதுமட்டுமின்றி, கடந்த 2 நாட்கள் முன் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. இதுவும் விமர்சனங்களை எழுப்பியது.

ஏற்கனவே பாஜகவுக்கு எதிராக பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள் கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் சேர நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் பாஜகவுடனான மோதல் நீடித்ததால், இன்று,  முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும், பாஜக  தங்களது எல்எல்ஏக்களுடன் இன்று தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர்.

நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டத்தில், பாஜகவின் சமீப கால நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானை பாஜக அரசியல் அனாதையாக்கியதை நினைவுகூர்ந்து, அதற்கு தகுந்தாற்போல் முடிவுகளை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணியை முறிப்பதாக அறிவித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவுடன் நட்பு பாராட்டினார். இருவரும் சேர்ந்து கவர்னரை சந்தித்தனர். அப்போது நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். இதனால் அவரது தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியுடன்  தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ், ஆர்ஜேடி, காங்கிரஸ்  தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் சேரவும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மகாபந்தன் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும், நிதிஷ்குமார் மீண்டும் மாநில முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்பப்படுகிறது.

பீகார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள  243 இடங்களில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. மீதமுள்ள 242 இடங்களில்,  பாஜகவிடம் 77 எம்எல்ஏக்கள் உள்ளனர். நிதிஷ் குமார்  கட்சியான ஜேடியூவில் 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேஜஸ்வி பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, சிபிஎம் 12, சிபிஐ 4, ஏஐஎம்ஐஎம் 1, சுயேட்சை 1 எம்எல்ஏ உள்ளனர்.

பீகாரில் ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், ஜேடியுவின் 45 எம்எல்ஏக்கள் உடன் லாலுவின் கட்சியான ஆர்ஜேடியின் 79 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தாலே மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்கலாம். ஆனால், நிதிஷ்குமார் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு உள்பட மகாபந்தன் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் பீகார் நிலவரம் குறித்து பாஜக எந்தவொரும் கருத்தையும் வெளியிடவில்லை. இதுதொடர்பான கருத்து தெரிவிக்க வேண்டாம் என பாஜக மேலிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, ஆர்ஜேடி மாநில தலைவர் ஜக்தானந்த் சிங், நிதிஷ் குமாரிடம் எங்கள் தரப்பில் இருந்து எந்த திட்டமும் கூறப்பட வில்லை. இது எல்லாமே வியூகம் என்றார். முன்னதாக ஆர்ஜேடி வட்டாரங்கள் கூறுகையில், பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தலைமை விஷயத்தில் மட்டும் சிக்கல் உள்ளதாகவும் கூறப்பட்டது.