பாட்னா
பீகார் மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை குஜராத் அரசிடமிருந்து முதல்வர் நிதீஷ் குமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வு மக்களிடையே சில மலரும் நினைவுகளை தூண்டி விட்டுள்ளது.
சமீபத்தில் பீகார் மாநிலத்தில் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு வெள்ள நிவாரண உதவி அளித்ததை முன்னிட்டு பா ஜ க தலைவர்களுக்கு முதல்வர் நிதீஷ்குமார் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மாநிலம் எங்கும் பிரதமர் மோடிக்கு நன்றி என ஒட்டப்பட்டிருந்த போஸ்டரும், பிரதமரின் புகைப்படமும் தனது புகைப்படமும் ஒன்றாக ஒரே அளவில் அந்த போஸ்டரில் இருந்ததையும் நிதீஷ்குமார் ரசிக்கவில்லை. காரணம் ஏதும் சொல்லாமல் அந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
இந்நிலையில், குஜராத் அரசு வெள்ள நிவாரணத்துக்காக பீகார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி அளித்துள்ளது. அதற்கான காசோலையை குஜராத் மாநில அமைச்சர் பூபேந்திர சிங் அளித்தார். பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷீல்குமாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதை முதல்வர் நிதீஷ்குமார் பெற்றுக் கொண்டார். பிறகு குஜராத் அரசுக்கு நன்றி கூறி அரசு சார்பில் ஒரு அறிவிப்பும் வெளியிட்டார்.
இதே போல் 2010ஆம் வருடம் மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது ரூ. 5 கோடியை குஜராத் அரசு அளித்தது. அப்போது அதை ஏற்க மறுத்து இதே நிதீஷ்குமார் திருப்பி அனுப்பிவிட்டார். அதே போல் இப்போதும் போஸ்டர்களினால் கோபமுற்ற நிதீஷ்குமார் இந்த உதவியை பெற்றுக் கொள்ள மாட்டார் என மக்கள் நினைத்திருந்த வேளையில் அதை பெற்றுக் கொண்டது, மக்களுக்கு முன்பு நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்துள்ளது. தேஜஸ்வி யாதவின் ஊழலை எதிர்த்து லாலுவின் கூட்டணியில் இருந்து விலகி ராஜினாமா செய்த நிதீஷ்க்கு பா ஜ க வின் உதவியால் தான் மீண்டும் பதவி கிடைத்தது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து குஜராத் அமைச்சர் பூபேந்திர சிங் இடம், அதே ரூ. 5 கோடியை இப்போதும் அளித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “காலம் மாறி வருகிறது. எப்போதோ 2010ல் நடந்ததை இப்போது 2017ல் கேட்கக் கூடாது. அது மட்டும் இன்றி பா ஜ க ஆளும் அனைத்து மாநிலங்களுமே ரூ. 5 கோடி தான் வெள்ள நிவாரண நிதியை மற்ற மாநிலங்களுக்கு வழங்கி வருகின்றன. அதே போல குஜராத் மாநிலமும் பீகாருக்கு அளித்துள்ளது. இதில் எந்த உள் நோக்கமும் இல்லை” என கூறி உள்ளார்.
முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்களில் ஒருவருமான தேஜஸ்வி யாதவ் இந்த நிதி உதவியை வாங்கியதற்கு வன்மையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், “எனது மனசாட்சியின் குரல் முன்பு இதே நிதீஷ்குமார் நிதி உதவியை திருப்பி அனுப்பியதை எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. இப்போது அதே குஜராத் அரசிடம் இருந்து நிதி வாங்கியதன் மூலம் அவர் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார் என்பதை என்னால் உணர முடிகிறது” என இந்தியில் பதிந்துள்ளார். மேலும் அக்கட்சியின் மற்றொரு தலைவரான நீரஜ்குமார், தங்களின் கட்சி முடிந்த அளவு நிதியையும், நிவாரணப் பணிகளுக்கு தங்களின் ஒத்துழைப்பையும் தரும் என கூறி உள்ளார்.