புவனேஸ்வர்

புதிதாக பதவியேற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் மூன்று நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறிக்கு ஆதரவாக பேசி விட்டு, தற்போது அதை மாற்றிப் பேசி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத்துறை அமைச்சராக கேரள மாநிலத்தை சேர்ந்த அல்ஃபோன்ஸ் பதவி ஏற்றுள்ளார்.  இவர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்.  பதவி ஏற்ற மறுநாள் டில்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “பாஜக உணவு விவகாரத்தில் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.  ஏற்கனவே கோவா முதல்வர் அம்மாநிலத்தில் மாட்டுக்கறி உண்ணுவது வழக்கமான ஒன்று என அறிவித்துள்ளார். அதைப் போலவே கேரளாவிலும் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உள்ளது.  எனவே மாட்டுக்கறி உண்ணுவதில் பாஜக வுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

நேற்று புவனேஸ்வரில் மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் மாட்டுக்கறிக்கு நாடெங்கும் எதிர்ப்பு இருப்பதால், அது சுற்றுலா பயணிகளிடம் ஏதும் பாதிப்பை ஏற்படுத்துமா என கேட்கப்பட்டது.  அதற்கு அல்ஃபோன்ஸ், “வெளிநாட்டினருக்கு ஆசை என்றால் மாட்டுக்கறியை அவர்கள் நாட்டில் சாப்பிட்டு விட்டு இங்கே வரலாம்” என கூறினார்.  பத்திரிகையாளர்கள் முதலில் அவர் கூறியதை நினைவு படுத்தியதும் சிரித்தபடி, “தேவை இல்லாமல் கதை அளக்க வேண்டாம்.  நான் சுற்றுலாத்துறை அமைச்சர். உணவு அமைச்சர் அல்ல” என கூறி நழுவி விட்டார்.

கோவா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் வருவது தெரிந்ததே.