மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி..
ஒன்பதாம் நூற்றாண்டில், தஞ்சைத் தரணியை விஜயாலயச் சோழன் ஆட்சி செய்து வந்தான். திடுமென, தேசத்தில் இனம் தெரியாத கொள்ளை நோய் தாக்கி, மக்கள் பலரும் மாண்டனர்.
இந்நிலையில் ஒருநாள் இரவு, சோழனின் கனவில் சந்நியாசி வடிவில் காட்சி தந்த சிவனார், ‘`ஒருகாலத்தில் அசுரர்களை அழிக்க என்னால் சிருஷ்டிக்கப்பட்ட நிசும்பசூதனி, உனது எல்லைக்குள் உக்கிரமாகி இருக்கிறாள். அவளைக் குளிர்வித்து, பூஜைகள் செய்’’ என்று அருளி மறைந்தார்.
விடிந்ததும், அரண்மனை ஜோதிடர்களிடம் விவாதித்த மன்னன், அவர்கள் சொன்ன ஆரூடத்தின்படி, சும்ப – நிசும்பர்கள் வதம் செய்யப்பட்ட இடத்தில் நிசும்பசூதனிக்கு ஆலயம் எழுப்பினான். காளியாக உருவெடுத்து அசுர வதம் நிகழ்த்தியவள் என்பதால், நிசும்பசூதனி உக்கிரகாளியம்மனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தான். அன்று துவங்கி இன்றளவும் தஞ்சையின் வடகிழக்கு எல்லையைக் காக்கும் தெய்வமாக அருளாட்சி நடத்திவருகிறாள் நிசும்பசூதனி!
தஞ்சாவூரின் குயவர் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ளது நிசும்பசூதனி உக்கிரகாளியம்மன் ஆலயம். கருவறையில், கையில் சூலம் ஏந்தி, வலது காலை மடக்கி, இடது காலால் அசுரனின் தலையை மிதித்தபடி ஆக்ரோஷமாகக் காட்சி தருகிறாள் அம்மன். கருவறையை அடுத்துள்ள மண்டபத்தில் சிவபெருமானும் விநாயகரும் சன்னிதி கொண்டுள்ளனர்.கோயிலுக்குள் நுழைந்ததும் வலது பக்கத்தில், விஜயாலயச் சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காளியையும் தரிசிக்கலாம்.
திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து, ராகு கால வேளையில் காளியம்மனுக்கு விளக்கேற்றி, வேப்ப மரத்தில் மஞ்சள் சரடு கட்டிப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை. மேலும், மாங்கல்ய தோஷம், தம்பதிக்கு இடையே பூசல், வழக்கில் இழுபறி ஆகியவற்றால் கலங்குவோர், நிசும்பசூதனியிடம் பிரார்த்தித்துச் சென்றால், விரைவில் பலன் கிட்டும்.