மதுரை:
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு மதுரை உயர்நீதி மன்றம் கிளை ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அவரை ஜாமினில் வெளியே எடுக்க அவரது உறவினர்கள் யாரும் முன்வராத தால், அவர் சிறையில் இருந்து வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தனது கல்லூரி மாணவிகளை பண ஆசைக்காட்டி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்காக வாதாட எந்தவொரு வழக்கறிஞரும் முன்வராத நிலையில், அவரது ஜாமின் கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டு வந்தது. சுமார் 330 நாட்கள் சிறையில் வாடிய அவருக்கு கடந்த 12ந்தேதி உயர்நீதி மன்றம் மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.
அவர் நேற்று மாலை வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை வெளியில் கொண்டு வர தாக்கல் செய்யப்படும் ஆவனங்களில், அவரது ரத்த சம்பந்த உறவினர்கள் யாரும் கையெழுத்திட மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் ஜாமினில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அவரது ஜாமினுக் காக வாதாடிய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், இதுகுறித்து கூறும்போது, நிர்மலா தேவி யின் உறவினர்களை சமாதானப்படுத்தி வருவதாகவும், இன்று எப்படியும் ஜாமினில் வெளியே கொண்டு வந்துவிடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.