சென்னை:
மாணவிகளிடம் பேசியது பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் தான் என்று சென்னையில் நடைபெற்ற குரல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கல் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல ஆசை காட்டிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்தில் மாணவிகளிடம் பேசியது நான் கிடையாது என்றும், அது தனது குரல் இல்லை என்றும் நிர்மலாதேவி மறுத்து வந்தார்.
இதையடுத்து அந்த ஆடியோவையும், தற்போது நிர்மலாதேவி பேசுவதையும் இணைத்து ஆடியோ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பட்டது.
இந்த ஆய்வில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த ஆடியோவில் உள்ளது பேராசிரியை நிர்மலா தேவியுடையது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
புத்தாக்க பயிற்சி மையம், விடுதி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி காமிரா பதிவு காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.