பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு!

Must read

டில்லி,

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தனி கேபினட் அந்தஸ்துள்ள, முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக  பொறுப்பேற்றார்.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி பதவியேற்றதில் இருந்து 3வது தடவையாக கடந்த வாரம் மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவ் பிரதாப் சுக்லா, பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் சௌபே, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர குமார், பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே, முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஹர்தீப் சிங் பூரி, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சத்ய பால் சிங் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஏற்ககனவே பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் பதவி விலகி, கோவா முதல்வராக பொறுப்பேற்றார். அதன் காரணமாக அந்த பாதுகாப்புதுறை பொறுப்பை, நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

தற்போது அந்த துறை புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீத்தாராமனுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவர் இந்திய பாதுகாப்பு துறையை நிர்வகிக்கும் இரண்டாவது பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article