டெல்லி:  46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறுகிறது.

மத்திய பொதுபட்ஜெட் 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

இன்றைய கூட்டத்தில், வரிச் சீர்திருத்தம் மீதான ஆய்வு செய்த மாநில நிதியமைச்சர்கள் குழு, அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜவுளி உள்பட பல பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்படுவது  குறித்தும் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து சில பொருட்கள் மீதான வரி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பருத்தி, பட்டு மற்றும் கம்பளி நெய்த துணிகள், தென்னை பாய்கள், பாய் மற்றும் தரை உறைகள், ஆடைகள் மற்றும் ஆடை அணிகலன்கள் உட்பட 18 பொருட்கள் விற்பனை மதிப்பு ரூ. 1,000 மற்றும் ஒரு ஜோடி ரூ.1,000 வரையிலான காலணிகளின் விலை 5% ஸ்லாப்பில் இருந்து 12% ஸ்லாபிற்கு மாற்றப்பட உள்ளது.

ஏற்கனவே கடந்த நவம்பர் 27 அன்று சில பொருள்கள் மீதான வரிவிகிதத்தை மாற்றியமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, வரி விகிதங்களை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்த அதிகாரி அளவிலான குழு பரிந்துரைத்தது. அது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.