டில்லி:
மத்திய நிதி பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். ஆனால், அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் ராகு காலம் என்பதால், அது குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நல்ல செயலை அல்லது புதிய முயற்சி ஒன்றை நாம் தொடங்கும்போது நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்குவதில்லை. ஆனால், இன்று நிர்மலா தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் ராகு காலத்திலேயே நடைபெற உள்ளது.
ஏற்கனவே 17வது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினமான மார்ச் 10ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ராகு காலத்தில்தான் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோகமாக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி முதல் 12.30 மணியிலான ராகு காலத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம். ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதாவது ராகுகாலம் ஆரம்பித்த பிறகு பட்ஜெட் உரையை ஆரம்பிக்கும் அவர், அனேகமாக ராகு காலம் முடிவடையும் போது பட்ஜெட் உரையை நிறைவு செய்வார் என்றே தெரிகிறது.
இதுகுறித்து இந்து மத நம்பிக்கையுயைவர்கள் பல்வேறு விமசனங்களை எழுப்பி வருகின்றனர். இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கக்கூடிய பட்ஜெட் உரையை, தீவிர இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜக அரசு, ராகு காலத்தில், தாக்கல் செய்யப் போவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், ஆனால், நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைப்போல இன்றைய பட்ஜெட்டை யும் நிர்மலா வெற்றிகரமாக தாக்கல் செய்து அரசியலில் மேலும் வளர்ச்சி அடைவார் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மக்களவையில், பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், நல்ல நேரம், வளர்பிறை, தேய்பிறை போன்ற பல் வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு தான் முக்கியமான விஷயங்களை முடிவெடுப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறது மத்திய அரசு.
கடவுள் நம்பிக்கை கிடையாது அல்லது பகுத்தறிவுபடிதான் செயல்படுவோம் என்று கூறக்கூடிய கட்சிகளின் தலைமை கூட, முக்கியமான விஷயங்களில், நாள், நட்சத்திரம் பார்த்துதான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், பாஜக அரசு மத நம்பிக்கையை தகர்த்தெறிந்து முதன் முதலாக ராகுகாலத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
பொதுவாக எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், ராகுகாலத்தில் செய்யக்கூடாது என்பதுதான் இந்துக்கள் நம்பிக்கை. துர்க்கை பூஜை மட்டுமே ராகு காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரே நல்ல விஷயமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.