கன்னியாகுமரி:

வங்க கடலில் உருவான ஒகி புயல் கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.

குமரி மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை வரும் முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டனர். சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றவர்கள் ஒகி புயலின் தாக்குதலால் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுள்ளனர். தேடுதல் பணியில் இந்திய கடலோரப்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இது வரை தமிழகத்தை சேர்ந்த 71 பேர் உட்பட 357 மீனவர்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு நிர்மலா சீதாராமன் இன்று மாலை வந்தடைந்தார். இங்கு தங்கியிருந்து மீட்பு பணிகளை அவர் துரிதப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.