பேஸ்புக்கில் பதிவிடும் பெரும்பாலானவர்களின் நோக்கம், எதையாவது எழுதி ஏகப்பட்ட லைக்கை அள்ளிவிட வேண்டும் என்பதுதான். அதற்காக எதையும் எழுதத் தயாராக இருக்கிறார்கள்.

இந்த லைக்  போதையால்தான் சமீப காலமாக ஏகப்பட்ட வதந்திகள் உருவாகின்றன. இதில் மிகக் கொடுமையானது….  யாராவது ஒரு வி.ஐ.பி. இறந்துவிட்டதாக பரப்பி விடுவார்கள். ஆரோக்கியமாக உட்கார்ந்து ிந்த செய்தியை படிக்கும் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி.யின் மனது எப்படி இருக்கும்? அவரது குடும்பத்தினர் மனநிலை எப்படி இருக்கும்?

இன்றைக்கு பதிவிட்ட பதிவுகளில் ஒன்று..

இதுகுறித்தெல்லாம் வதந்தியாளர்கள் கவலைப்படுவதில்லை.

இன்று வேறுவிதமான வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள். அன்னை தெரசா நிர்மாணித்த அறக்கட்டளையை நிர்வகித்து வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷி இன்று காலமானார் என்று ஒரு தகவலை முகநூலில் பரப்பி வருகிறார்கள். இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக், ஏகப்பட்ட பகிர்வுகள்.

உதாரணமாக, செல்வி கணேசவள்ளி என்ற பதிவர் நான்கு மணி நேரத்துக்கு முன் இந்த “செய்தி”யை பதிந்திருக்கிறார். இதை 416 பேர் பகிர்ந்திருக்கிறார்கள். இருநூற்றி சொச்சம்பேர் லைக் போட்டிருக்கிறார்கள், பலர், ஆர்ஐபி தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், அருட்சகோதரி நிர்மலா ஜோஷி இருவருடங்களுக்கு முன்பே அதாவது 2015 ஜூன் 23ம் தேதி தேதி தனது 81 வயதில் இயற்கை எய்திவிட்டார்.

அவரைத்தான் மீண்டும் இன்று மரணமுற வைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள் சிலர்.

அன்னை தெரசாவின் அன்பின் துறவற சபை தலைவராக சிறப்புடன் செயல்பட்டவர்  அருட்சகோதரி நிர்மலா.   தற்போது அன்பின் பணியாளர் சபையின் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த மேரி பிரேமா பியரிக் பணியாற்றி வருகிறார்.

இதை அறியாமல் பலரும் அந்த மரணச் “செய்தியை” பகிர்ந்துவருகிறார்கள்.

சரி இதை காரணமாக வைத்தாவது அருட் சகோதரி நிர்மலா அவர்களைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

1934ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார் நிர்மலா.  பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் கல்வி பயின்றார்.  இந்து பிராமண குலத்தில் பிறந்த நிர்மலா,  பிறகு அன்னை தெரசாவை பற்றி கேள்விப்பட்டு  அவரை போல  சேவை செய்ய முடிவெடுத்து  ரோமன் கத்தோலிக்கராக மதமாறினார்.  அவர், தெரசா நிறுவிய அன்பின் பணியாளர் சபையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1997ம் ஆண்டு தெரசாவின் மறைவிற்கு பின், அன்பின் பணியாளர் சபை தலைவராக அருட் சகோதரி நிர்மலா ஜோஷி பொறுப்பேற்றார். 2009ம் ஆண்டு அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

சிலகாலம் உடல்நலம் குன்றியிருந்த சகோதரி நிர்மலா 2015 ஜூன் 23ம் தேதி தனது 81வது வயதில் கொல்கத்தாவில் காலமானார்.