மதுரை:

நிர்மலா தேவி விவகாரதில் சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமியிடம் இன்று 3வது நாளை விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி ஆசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் ஒருபுறம், சந்தானம் குழுவினர் ஒருபுறம் என தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சந்தானம் குழுவினர் நேற்று நிர்மலாதேவியிடம் மதுரை சிறைச்சாலைக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில், இன்று அருப்புக்கோட்டை கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோல, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகனிடம் 3-வது நாளாக விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  மதுரை ஒத்தகடையில் முருகன் வீ்ட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுபோல மற்றொரு புறம்  ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமியிடமும் 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் பெறப்பட்டு வரும் வாக்குமூலங்களை தொடர்ந்து,  காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி இயக்குனர் கலைச்செல்வன், தொலைதூரக் கல்வி இயக்குனர் விஜயதுரையிடமும், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் விசாரணை வளையம் நீண்டுக்கொண்டே செல்வதாகவும்,  மேலும் பல முக்கிய தலைகள் சிக்க வாய்ப்பிருப்பதாகவும்  கூறப்படுகிறது.