டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது.

அந்த வாரண்டை நிறுத்தி வைத்தும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டது.

இந்த தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் விதமாக குற்றவாளி அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை இன்று காலை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோன்று மற்றொரு குற்றவாளியான அக்சய் குமார் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.