டில்லி:

ந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான பிரபல வைர வியாபாரி  நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளது  பாஜக அரசின் தேர்தல் நாடகம் என்று காங்.மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கடன் பெற்று முறைகேடு செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. அவர் தனது உருவத்தை மாற்றி லண்டனில் நடமாடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் லண்டனின் அரசிடமும், நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிரவ் மோடி கைது குறித்து காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்  கூறியதாவது,

ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு நிரவ் மோடியை வெளிநாட்டுக்கு தப்பி ஓடவிட்டு விட்டு, கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்தார்கள். வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதே பாஜகதான்;

5 ஆண்டுகளாக அவர் வசதியாய் வாழ்ந்து வந்த நிலையில்,  தற்போது லோக்சபா தேர்தலை முன்னிட்டு அவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வருவது போல  நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதை  ஸ்கார்ட்லாந்து யார்டு  காவல்துறை உறுதி செய்துள்ளது. அவரை  இந்திய அதிகாரிகள் இன்று பிற்பகல் சந்திப்பார்கள் என்றும்,  நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.