சென்னை: கேரளாவில்  மீண்டும்  நிபா வைரஸ்  பரவி வருகிறது. இதற்கு 2 பேர் பலியான நிலையில், கேரளம்  தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த  பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டு உள்ளார்.

கேரளாவில் கடந்த 2018ல் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் பலியாகினர். அதன்பின் நோயின் தாக்கம் குறைந்தது. தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  இதனால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில்,  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், நான்கு பேருக்கு ‘நிபா’ வைரஸ் தொற்று அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்த, அவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு.சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, கேரளாவில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் ரத்த மாதிரிகள் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஆய்வகத்தில் நடத்திய பரிசோதனையில் நிபா உறுதி செய்யப்பட்டதாகவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. கேரள தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் 24 x 7 சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்

என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.