நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்சத இயந்திரங்கள் மூலம் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் கடலுக்கடியில் உள்ள கனிம வளம் குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் சமீபத்தில் இந்து மகா சமுத்திரத்தில் ஆய்வு மேற்கொண்டது, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5270 மீட்டர் ஆழத்தில் உள்ள கடற்பரப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சாகர் நிதி என்ற ஆய்வுக் கப்பல் (ORV Sagar Nidhi) மூலம் சென்னையில் இருந்து சுமார் 3000 கி.மீ. 11 நாட்கள் பயணம் செய்து சர்வதேச கடற்பரப்பு ஆணையம் (International Seabed Authority – ISA) இவர்களுக்கென வயறுத்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுப் பணிக்காக சென்ற குழுவில் இடம்பெற்ற 27 பேருக்கும் உரிய கொரோனா பரிசோதனை நடைமுறைகள் மேற்கொண்ட பிறகே கப்பலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கடலுக்கடியில் நகர்ந்து செல்வதற்கான க்ராளர் இயந்திரம் மற்றும் அதனை கப்பலில் இருந்து இயக்குவதற்கான கேமரா உதவியுடன் ஆய்வில் இறங்கிய இந்த குழுவினர், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ முதல் 6 கி.மீ ஆழம் வரை உள்ள கடற்பரப்பில் 120 மீட்டர் தூரம் நீளத்திற்கு ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வுப் பணி முழுவதையும் இணைய வசதி மூலம் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்தவர்கள் நேரடியாக கண்காணித்ததுடன், இதனை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தில் உள்ளவர்களுக்கும் ஒளிபரப்பினர்.
2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த ஆய்வு குறித்து தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜிஏ. ராமதாஸ் மற்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட தலைமை விஞ்ஞானி கே கோபகுமார் ஆகியோர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தனர்.
கடலுக்கடியில் உள்ள கனிம வளம் குறித்து ஆய்வு செய்வதற்காக 1970 ம் ஆண்டு பசிபிக் மகா சமுத்திரத்தில் 4 கி.மீ ஆழத்தில் ஆய்வு செய்யப்பட்டது, தற்போது இந்த ஆய்வு சுமார் 6 கி.மீ. ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்