குன்மிங், சீனா

பிறந்து ஒன்பது நாளிலேயே மூளைச்சாவு அடைந்த ஒரு குழந்தையின் சிறுநீரகம் பெற்றோர்களின் ஒப்புதல் பேரில் வேறு ஒரு சிறுநீரகம் பழுதடந்த குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

இறந்தவர்களின் உடலை எரிப்பதோ புதைப்பதோ அவரவர்கள் வீட்டு வழக்கம்.  ஆனால் உடலிலுள்ள உறுப்புக்களை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்குவதை விட இன்னொரு உயிரை வாழ வைப்பது மிகவும் பயனுள்ள வழக்கம்.  இந்த வழக்கத்தை பலரும் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது ஆரோக்யமான விஷயம்.  இந்நிலையில் சீனாவில் பிறந்து ஒன்பதே நாட்களான ஒரு குழந்தையின் சிறுநீரகம் தானம் செய்யப்பட்டு உலகிலேயே மிகவும் இளைய உடல் உறுப்பு கொடையாளர் என்னும் பெருமையை அந்தக் குழந்தை பெற்றுள்ளது.

ஜுவோ என்னும் சீனப் பெண் குன்மிங்கில் உள்ள தாய் சேய் நல விடுதியில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.  குழந்தை பிறந்ததிலிருந்தே கடும் மூச்சுத்திணறலுடன் இருந்தது.  மருத்துவர்களின் முயற்சி எதுவும் பலன் தராமல் நான்கு தினங்கள் கோமா நிலையில் இருந்த அந்தக் குழந்தையின் மூளை செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது.

கடும் துயரத்தில் இருந்த போதிலும் குழந்தையின் சிறுநீரகத்தை தானம் செய்ய பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.  ஜுவோவின் கணவர், “எட்டு நாட்களே ஆனாலும் அவள் என் குழந்தை.  ஒரு குழந்தையை பிரியும் துயர் என்ன என்பதை அவள் எனக்கு உணர்த்தி விட்டாள்.  அதே துயரம் மற்றொரு பெற்றோருக்கு ஏற்படக்கூடாது என்பதாலும், இறந்தாலும் என் மகளுடைய உடல் உறுப்பாவது வாழட்டும் என்னும் எண்ணத்தாலும் இந்த கொடைக்கு நான் சம்மதித்துள்ளேன்” என கண்ணீர் மல்கக் கூறினார்.

வூகான் என்னும் சீன நகரில் ஒரு எட்டுமாத ஆண் குழந்தை சீறுநீரகம் செயலிழந்து மரணப் படுக்கையில் இருந்தது.  இந்து இந்தப் பெண் குழந்தையிடம் இருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம், வூகான் நகருக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட் குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்திய டாக்டர் ஜோவோ யாங்கெங் சிறுநீரகம் நன்கு பொருந்தி விட்டதாகவும், வேலை செய்யத் துவங்கி விட்டதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தார்.

கடும் துயரத்திலும் மற்றவருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட அந்த பெற்றோரை சீன மக்கள் வாழ்த்துகின்றனர்