காதலுக்காக கோடிக்கணக்கான சொத்துக்களை துறந்த மலேசியப் பெண்!

ஹாங்காங்

லேசியாவின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கூ கே பெங்க் என்பவரின் மகளான லாரா ஆஷ்லி (வயது 34) தனது காதல் திருமணத்துக்கு தந்தை சம்மதிக்காததால், அனைத்து சொத்துக்களையும் வேண்டாம் என உதறித் தள்ளி விட்டார்.

தொழிலதிபர் கூ கே பெங்க்,  ஓட்டல்கள், துணி வியாபாரம், அழகு நிலையங்கள் என பல தொழில் செய்பவர்.  இவருடைய சொத்து மதிப்பு 407 மில்லியன் டாலர்கள் என சொல்லப்படுகிறது.  இவருடைய முன்னாள் மனைவி ஏஞ்சலின் மலேசியா அழகி பட்டம் வென்றவர்,  தற்போது விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மகளான லாரா ஆஷ்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது கர்ரீபியன் நாட்டில் பிறந்த ஜெடிடியா ஃப்ரான்சிச் என்னும் இளைஞருடன் காதல் வயப்பட்டார்.  ஆனால் வழக்கம் போல செல்வத்தை காரணம் காட்டி தந்தை லாராவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  ஆனால் லாராவின் பிடிவாதம் மாறவில்லை.

சமீபத்தில் இவர் தனது தந்தையுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.  இதனால் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களின் உரிமையை இழந்துள்ளார்.  ஆனால் அதைப் பற்றி லாரா சிறிதும் கவலை கொள்ளவில்லை.  தனது தந்தை செய்வது தவறு எனவும்,  எது சரி என்பதை உணர்ந்தே தான் செய்வதாகவும் கூறி உள்ளார்.

லாராவின் தாயும் தந்தையும்

மேலும் கூறுகையில் “இவ்வளவு சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பது மிகவும் அதிர்ஷ்டவசமானதே.  ஆனால் அந்த சொத்துக்களை அனுபவிக்க வேண்டும் என்றால் நமது மனதுக்கு பிடித்தமானதை செய்ய இயலாத நிலையில் அது இருந்தும் பயனில்லை.  தேவை இல்லாமல் மன நிம்மதியை இழந்து செல்வத்துடன் வாழ்வதை விட, நான் அந்த தேவையற்ற செல்வத்தை இழந்து மனநிம்மதியுடன் வாழப்போகிறேன்” என்றார்.

தற்போது விவாகரத்து செய்துக் கொண்ட தன் தாய் ஏஞ்சலினுடனும், மற்றும் பாட்டி பாவுலின் சாய் என்பவருடனும் லாரா வசித்து வருகிறார்.  விரைவில் காதலரை மணமுடிக்கப் போகிறார்.   லாரா கல்வி பயிலும் போதே தந்தையின் நிறுவனங்கள் பலவற்றையும் கவனித்து வந்தார்.  அது தவிர தான் சுயமாக ஒரு ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த துணிச்சலான பெண் தனது தாயின் விவாகரத்து வழக்கில் தந்தையை எதிர்த்து சாட்சி சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏஞ்சலின் தன் கணவரால் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி தொடர்ந்த விவாகரத்து வழக்கில் தன் தந்தை தாயை வன்முறைக்கு உள்ளாக்கியது உண்மைதான் என சாட்சியம் அளித்தார்.

 

 
English Summary
Malaysian millioner's daughter forgo all her properties to marry her lover against her father's wish