சென்னை: மழைபிரதேச ஆக்கிரமிப்புக்கும், பெரும் பணக்கார முதலைகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக  நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார்.  நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுபேற்ற பிறகு சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தது என பொதுமக்களிடையே அவரது பணிக்கு வரவேற்பு கிடைத்தது. மேலும், மலைப்பிரதேச ஆக்கிரமிப்பு, யானை வழித்தடங்களை மறித்து கட்டிடம் கட்டப்பட்டது உள்பட பல பெரு முதலாளிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, அவரை மாற்ற உச்சநீதி மன்றம் தடை விதித்திருந்தது. தற்போது திமுக அரசு பதவி ஏற்றதும், அவரை மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்கு உச்சநீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியது.

இதையடுத்து, அவரை இடமாற்றம் செய்துள்ள தமிழக அரசு புதிய ஆட்சியதாக அம்ரித்தை நியமனம் செய்துள்ளது. இவர் ஏற்கனவே  நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராக இருந்துள்ளார்.

இடம் மாற்றப்பட்ட இன்னசென்ட் திவ்யா, எந்த பணியிடத்துக்கு மாற்றப்பட்டார் என்பது குறித்து அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.