சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 43 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை முடிவடைந்துள்ளது. இந்த சோதனையின்போது, டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிஎஃஐ கட்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில், அந்த கட்சியினரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகஅரசு மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், தமிழகஅரசு மீதான நம்பக்கத்தன்மையை கேள்விக்குறியாக்கியது. மேலும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவருடன் இருந்த மற்றவர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்கள் என்பது அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவனங்கள் மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில், இன்று சென்னை, கோவை உள்பட 43 இடங்களில் டெல்லியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 18 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற சோதனைகள் முடிவடைந்து உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் என்று தெரிவித்துள்ள என்ஐஏ அதிகாரிகள், கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜமேஷாவுக்கு உதவியான ஆன்லைன் மூலம் வெடிமருந்துகள் வாங்கியுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது என்ழும் தெரிவித்துள்ளனர்.