மன்னார்குடி: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வரும் மன்னார்குடி  ஆசாத் தெருவில் உள்ள பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள்  இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பல முறை இவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ள நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

பக்ருதீன் என்பவர்  தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க ஆதரவாளர் என  கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை அவரது வீட்டுக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர்.

பாவா பக்ருதீன் என்பவர்,   721 என்ற குற்ற எண் கொண்ட, முகமது இக்பால் என்பவர் தொடர்புடைய ஒரு வழக்கில் பாவா பக்ருதீனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இவர் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை கொண்ட சில அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது  இதையடுத்து, இவரது  வீட்டில் கடந்த 2021 மற்றும் 2023-ம் ஆண்டும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது . இந்த நிலையில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

பாவா பக்ருதீன்(46) திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் .  இவர்  தனது மனைவியின் சொந்த ஊரான மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில், கடந்த சில ஆண்டுகளாக  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தஞ்சாவூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.