டெல்லி: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றபட்டன. மேலும் காரில் சிலிண்டர் வெடித்ததில் வெடிகுண்டில் உபயோகப்படுத்தப்படும் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதனால், இது தற்கொலை தாக்குதல் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட டைரியில், கோவை மாநகரில் 5 இடங்களில் குண்டு வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவத்தில் மேலும், முபினுக்கு உதவியதாகவும், அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஏற்கனவே நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும் தொடர்பு இருப்பதும், இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு குற்றவாளியுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கோவை கார் விபத்து விசாரணையை என்ஐஏ விசாரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், தமிழகஅரசின் பரிந்துரையை ஏற்று, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட்டது. முன்னதாகவே என்ஐஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு, குண்டுவெடிப்பு தொடர்பாக ஆய்வு செய்துவந்த நிலையில், தற்போது, அதிகாரப்பூர்வமாக என்ஐஏ அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் எஸ்.பி.தலைமையில் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.