ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் – வடகால் பகுதியில் 18,000 பேர் தங்கும் வகையில் மெகா தங்கும் விடுதியை தமிழக அரசு கடந்த வாரம் திறந்துவைத்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு-விடம் அந்நிறுவன பணியாளர்களுக்கான விடுதிகளின் சாவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது பேசிய யங் லியு தொழிற்பேட்டையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்கு இதுபோன்ற தொழில்நகரங்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் ஓசூர் தொழிற்பேட்டையில் மொபைல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்ட தீர்மானித்துள்ளது.

அதற்காக தமிழக அரசுடன் இணைந்து 3000 அறைகளுடன் 14 தொகுப்புகள் கொண்ட அடுக்குமாடிகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த வளாகத்தில் நூலகம், ஜிம் மற்றும் சமூக கூடங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.