சென்னை
அடுத்த மாதம் சென்னையில் பேருந்து, ரயில், மற்றும் மெட்ரோவில் பயணம் செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்தாக பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரெயில் வசதிகள் சென்னையில் உள்ளன. இவற்றில் இதுவரை மக்கள் தனித்தனியாக பயணச்சீட்ட வாங்கி பயணம் செய்து வருகின்றனர்.
அண்மையில் சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது இதற்கான செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது.
இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாத இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பயணிகள் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.