மைசூரு:

கவுரி லங்கேஷை தொடர்ந்து ஒரு பேராசிரியரை கொலை செய்ய இந்துத்வா பிரமுகர் திட்டமிட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நவீன்குமார் என்ற இந்துத்வா அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கவுரி லங்கேஷை தொடர்ந்து பேராசிரியர் கே.எஸ்.பகவானை கொலை செய்ய திட்டமிட்டிருந்தாக நவீன்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து 74 வயதாகும் பேராசிரியர் பகவான் கூறுகையில்,‘‘நான் அவர்களது இலக்காக இருப்பது ஏற்கனவே எனக்கு தெரியும். கர்நாடகா அரசு எனக்கு அளித்துள்ள பாதுகாப்பு வளையத்தால் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். இல்லை என்றால் நான் ஆறு மாதத்திற்கு முன்பே கொல்லப்பட்டிருப்பேன்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘ சங்கராச்சாரியார் குறித்து கவுரி லங்கேஷ் புத்தகம் எழுதியது முதலேயே அவரது உயிருக்கு அச்சறுத்தல் ஏற்பட்டது. எனக்கு சமஸ்கிருதம் தெரியும். அதனால் சங்கராச்சாரியார் பணிகளை ஆய்வு செய்தேன். அவர் மனிதகுலத்தை வெறுத்தவர். அவர் குறித்த புத்தகம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெளிவு ஏற்பட்டது’’ என்றார்.

போலீசார் இந்த வழக்கில் தனி அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். கவுரி லங்கேஷ் வழக்கில் முதல் குற்றவாளியான பிரவீன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கவுரி லங்கேஷ் கொலைக்கு முன்பு இவர்கள் பல பகுத்தறிவாதிகளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

புனேவில் நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, மகாராஷ்டிரா கோல்காப்பூரில் கம்யூனிஸ்ட் சிபிஐ தலைவர் கோவிந் பன்சாரே 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் கர்நாடகாவில் கால்புர்கி 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி கொல்லப்பட்டுள்ளார்.

1999ம் ஆண்டு ஜெயந்தி பாலாஜி என்பவரால் தொடங்கப்பட்ட சனதன் சான்ஸ்தா என்ற இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதை உளவுப் பிரிவு போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த அமைப்பு மகாராஷ்டிரா, கர்நாடகா பகுதியில் பகுத்தறிவு மற்றும் நாத்திகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

4 வெடிகுண்டு வழக்குகளில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது. ‘‘இந்த அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்பு இல்லாததால் இதை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை’’ என்று 2015ம் ஆண்டில் மத்திய பாஜக அரசு ராஜ்யசபாவில் தெரிவித்தது.

‘‘இந்த முறை தான் விசாரணை முன்னோக்கி நகர்கிறது. இதற்கு நவீன்குமார் காவலில் இருப்பது தான் காரணம்’’ என்று போலீசார் தெரிவித்தனர். நவீன் குமாருக்கு ஆதரவாக இந்துத்வா வக்கீல்கள் சிலர் முன் வந்துள்ளனர். அவர்கள் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று வாதாடி வருகின்றனர். ஆனால் உண்மை விரைவில் வெளிவரும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.