சென்னை: 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுதேர்வுகள் தொடங்கும் தேதிகளை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதிகளையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறும் எனக் கூறினார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையிலும் நடைபெறும்.
11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2 வரை நடைபெறும் என்றும் கூறினார். மேலும், தேர்வு முடிவுகளைப் பொறுத்த வரையில், 10-ம் வகுப்பிற்கு 17ம் தேதியும், 11-ம் வகுப்புகளுக்கு ஜூலை 7-ம் தேதியும், 12ம் வகுப்புக்களு ஜூன் 23-ம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், பிளஸ்-2 செய்முறை தேர்வு முடிவுகள் ஜூன் 23-ந் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.
10 மற்றும் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை (dge.tn.gov.in, tnschools.gov.in) இணையதளங்களில் வெளியிடப்படும் என்ற அவர், 12ம் வகுப்புகளுக் கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறுக்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், இந்த ஆண்டு நடைபெற உள்ள 10,11,12ஆகிய மூன்று வகுப்புகளையும் சேர்த்து மொத்தமாக 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்றார்.
பொதுத்தேர்வின்போது, வினாத்தாள் கசிவதை தடுக்க, இரண்டு வினாத்தாள் தயாரிக்கப்பட இருப்பதாகவும், இதில் எந்த வினாத்தாள் மாணாக்கர்களுக்கு கொடுப்பது என்பது குறித்து தேர்வு நடைபெறும் நாளன்றுதான் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், தேர்வு முடிந்து வழக்கமான வகுப்புகள் தொடங்கும் தேதியையும் வெளியிட்டார். அதன்படி, 2022-23ம் கல்வியாண்டுக்காக 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் ஜூன் 13-ந்தேதி தொடங்கும் என்று கூறியதுடன், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ந் தேதி தொடங்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.