ஆக்லாந்து: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.

ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளை வென்றதன் மூலம், டி-20 தொடரை கைப்பற்றிவிட்டது நியூசிலாந்து. இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டி நடைபெற்றது.

மழை காரணமாக, இந்தப் போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேசம், முதலில் பந்துவீச தீர்மானித்தது. ‍இதனையடுத்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

அந்த அணியின் துவக்க வீரர் கப்தில், 19 பந்துகளில் 44 ரன்களை சேர்த்தார். அதில், 5 சிக்ஸர்கள் அடக்கம். ஆலன் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 10 பவுண்டரிகளுடன் 71 ரன்களைக் குவித்தார். அடுத்த 2 வீரர்களும்கூட அதிரடி காட்டினர். நியூசிலாந்து தரப்பில் மொத்தமாக 10 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. பவுண்டரிகளின் எண்ணிக்கை 12. ஆகமொத்தம் அந்த அணிக்கான 108 ரன்கள் இவற்றின் மூலமாக வந்தவை.

இறுதியில், 10 ஓவர்களின் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைக் குவித்தது அந்த அணி.

பின்னர், பந்துகளைவிட, 81 ரன்களை அதிகம் எடுக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் களமிறங்கிய வங்கதேச அணியில், நெய்ம் எடுத்த 19 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். ஹொசெய்ன் 13 ரன்களை அடித்தார். தேவையான ஆட்டத்தை யாருமே ஆடவில்லை.

முடிவில், 9.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி, 76 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, தொடரில் ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம்.

நியூசிலாந்தின் டோட் ஆஸ்டில் 4 விக்கெட்டுகளையும், செளதி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.