வெலிங்டன்

நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த  ஐந்து நாட்களாக புதிய  பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு அற்றதாகி உள்ளது.

உலக நாடுகளில் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தது மிகச் சில நாடுகளே ஆகும்.  அதில் நியூசிலாந்தும் ஒன்றாகும். இந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன்பிறகு இங்குச் சிறிது சிறிதாக கொரோனா தாக்கம் அதிகரித்தது.  இந்நாட்டில் மொத்தம் 1154 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு அதில் 21 பேர் உயிர் இழந்தனர்.

கொரோனா பரவுதலைத் தடுக்க நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா நாடு முழுவதும் கடும் ஊரடங்கைப் பிறப்பித்தார்.  கடந்த ஏப்ரல் 18 முதல் இந்நாட்டில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வந்தது.  அப்போது நாட்டில் 95 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.   இதற்குப் பிரதமரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம் எனப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

நியூசிலாந்தில் கடந்த 5 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் இன்று முழு குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.  இதனால் நியூசிலாந்து தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத நாடு ஆக மாறி உள்ளது.

இதே கால கட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய பிரிட்டனில் இதுவரை 37000க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.