சென்னை: புத்தாண்டை முன்னிட்டு இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருபவர்கள், வாகனங்களை எங்கே நிறுத்தலாம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இன்று கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட நினைப்பவர்கள், காவல்துறையினரின் அறிவிப்புகளை படித்துவிட்டு செல்வது நல்லது.
காவல்துறை கட்டுப்பாடுகள் விவரம்:
- புத்தாண்டு பிறப்பதற்கு முதல்நாள் (இன்று) மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். அந்தக் கொண்டாட்டத்தின்போது அசம்பாவதங்கள் ஏதும் நேர்ந்துவிடாமல் இருப்பதற்கு காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- 31. 12.2022 அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது, 3112.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர். 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
- வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை • முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில்ஈடுபடக் கூடாது.
- மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
- அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள்,
- மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
- வழிபாட்டுத் தலங்களுக்கு காவல் துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள்,அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
- கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தரும் பொதுமக்களின் இரகசியம் காக்கப்படும்.
- அவசர உதவி தேவைப்படுபவர்கள் ‘காவல் உதவி’ என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு ‘காவல் உதவி’ செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.
- அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழ்நாடு காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்கிறோம்.
கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை – முழு விவரம் :
காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனைத்து மேம்பாலங்களும் 31-ந்தேதி இரவு 10 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.
கடற்கரை உட்புற சாலை 31-ந்தேதி இரவு 7 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
பாரிமுனை சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை, விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை – நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை – டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
அடையாரில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தைவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம்.
பாரிமுனையில் இருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பஸ்களும் ஆர்.பி.சுரங்கப்பாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கதீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.
எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 31-ந்தேதி அன்று இரவு 8 மணிக்கு பின்னர் 6-வது அவென்யூ நோக்கி 1-ந்தேதி அன்று 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
6-வது அவென்யூ, 5-வது அவென்யூ சந்திப்பு, 4-வது மெயின் ரோடு சந்திப்பு, 3-வது மெயின் ரோடு சந்திப்பு, 16-வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7-வது அவென்யூ எம்.ஜி. ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருவோர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான் இடங்கள் விவரம்:
அதன்படி,
- சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை வரை ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- பாரதி சாலை (விக்டோரியா ஓட்டல் சாலை-பாரதி சாலை சந்திப்பில் – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- பொதுப்பணித்துறை அலுவலகச் சாலை.
- டாக்டர் பெசன்ட் சாலை (எம்.ஆர்.டி.எஸ். அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- லாயிட்ஸ் சாலை (நடேசன் சாலையை நோக்கி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் அருகில் இருந்து – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- ராணி மேரி கல்லூரி வளாகம்.
bபெசன்ட் நகர் – எலியாட் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தும் இடங்கள்:
- பெசன்ட் நகர் 4-வது அவென்யூ – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- பெசன்ட் நகர் 3-வது மெயின் ரோடு – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- பெசன்ட் நகர் 4-வது மெயின் ரோடு – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- பெசன்ட் நகர் 5-வது அவென்யூ – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- பெசன்ட் நகர் 2-வது அவென்யூ – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
- பெசன்ட் நகர் 3-வது அவென்யூ- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)