மே மாத தொடக்கத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலைவிரித்தாடிய போது, டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரக ஊழியர்களும் அதில் இருந்து தப்பவில்லை.

நியூஸிலாந்து தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவருக்கு அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுவதாக தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதியப்பட்டது.

உடனடியாக தொடர்புகொண்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய இளைஞர் அணி தலைவர் ஸ்ரீனிவாஸ் நியூஸிலாந்து தூதரகத்திற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்று கொடுத்தார்.

பதினைந்து நாட்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் அந்த ஊழியர் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இரு தினங்களுக்கு முன் இறந்துபோனதாக தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சில மணிநேரங்களிலேயே அரசியலாக்கப்பட்டு, அதற்காக தூதரக அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டிய சூழல் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், 1986 முதல் அந்த தூதரகத்தில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவித்த தூதரக அதிகாரி, இங்கு பணிபுரியும் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை போல் பழகி வந்தோம்.

இறந்தவரின் சுயவிவர பாதுகாப்பு கருதி அவரை குறித்த தகவல்களை வெளியிடமுடியாது என்று தெரிவித்த அவர் மேலும் சில இந்திய ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவித்தார்.