சென்னை: மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாலும், லாக்டவுனில் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதாலும், பிக்பாஸ் அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் மலையாளம் சீசன்-3 ஷூட்டிங் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திடீரென ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. மலையாளம் பிக்பாஸ் நிகர்ச்சி 95 நாட்களை கடந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள  6 பேருக்கு கொரோனா உறுதியானதாக அண்மையில் உறுதிப்படாத தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை சேனல் நிர்வாகம் மறுத்தது. இந்த நிலையில்  ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கொரோனா ஊரடங்கை மீறி ஷூட்டிங் நடைபெறுவதாக பூந்தமல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன், வட்டாட்சியர் சங்கர் ஆகியோர் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து, அரங்கில் உள்ளவர்களை வெளியேற உத்தரவிட்ட அதிகாரிகளி,  பிக் பாஸ் அரங்கின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன்,  அரங்கின் 3 நுழைவாயில்களுக்கும் சீல் வைத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியி  போட்டியாளர்கள், ஊழியர்கள் உட்பட அனைவரும் பிபிஇ கிட் அணிந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.