இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு வாகனப் பிரியர் என்பதை அனைவரும் அறிந்ததே, ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் 23 பைக்குகளும் 10 கார்களும் வைத்திருக்கிறார். இந்தியாவுக்கும் நியூஸிலாந்து அணிக்கும் ஒருநாள் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் நியூஸிலாந்து அணியின் வீரர்கள் கடந்த செவ்வாயன்று காலை ராஞ்சியின் பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்கள்.
பயிற்சிக்கு செல்லும்போது அனைத்து வீரர்களும் அணியின் பேருந்தில் செல்ல தோனி தனது விலையுயர்ந்த ஹம்மர் காரை எடுத்து அதை தானே ஓட்டியபடி மைதானத்துக்கு வந்தார். சாலையில் வரும் வழியில் தோனியின் கார் நியூசிலாந்து அணியின் பேருந்தை கடந்து வர, இந்திய அணியின் கேப்டன் காரை ஓட்டி வருவதை கண்ட நியூசிலாந்து வீரர்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தனர்.
இந்த இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் ஹெச்2 காரை வாங்க தோனி ரூ.43 லட்சமும் பதிவு செய்ய ரூ1.5 லட்சமும் கட்ட வேண்டியதிருந்தது.
இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னனியில் உள்ளது. மொஹாலியில் நடந்த கடந்த போட்டியில் தோனி அதிரடியாக ஆடி 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.