சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையட்டி, சென்னையில் மட்டும் அரசின் விதிகளை மீறிய 245க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
2025-ம் ஆண்டு புத்தாண்டு உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட , தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. மேலும், கடற்கரை, மேம்பாலம் போன்ற பகுதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சென்னை முழுவதும் 425 இடங்களில் தற்காலிக வாகனத் தணிக்கை சோதனை சாவடிகள் சென்னை பெருநகர காவல் துறையால் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புத்தாண்டு அன்று இரவு மற்றும் பகல் நேரங்களில், வுதிஇந்தச் சோதனை சாவடிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் மது போதையில் வாகனம் இயக்கியது, அதிவேகமாக வாகனம் இயக்கியது, உரிய உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது உட்பட பல்வேறு இடங்களில் 245 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சென்னை பெருநகரப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பதிவின் அடிப்படையில் வாகன ஓட்டுனர்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.