சென்னை: இன்று நள்ளிரவு பிறக்க உள்ள 2022 புத்தாண்டுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ், ஓபிஎஸ், பாமக ராமாஸ், மதிமுக வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக தலைவர் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துஉள்ளனர்.

அதிமுக – ஓபிஎஸ் – இபிஎஸ்

புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம். புலரும் புத்தாண்டில், மக்கள் அனைவரது வாழ்க்கையும் புதுப் பொலிவு பெறச் செய்யட்டும்; புதிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும் கொண்டுவரட்டும்; பகைமை, வெறுப்பு உள்ளிட்ட தீய விஷயங்கள் அனைத்தும் ஒழிந்து; அன்பு, நட்பு உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த மண்ணுலகில் பெருகட்டும் என்றும்; மக்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைப் பெற்றிடவும்.

உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திடவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

பாமக – டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உறுதியான, குலையாத நம்பிக்கைகளுடன் 2022-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன… ஆனால், அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது என்பது தான் கடந்த சில ஆண்டுகளில் நாம் கற்றுக் கொண்ட பாடம் ஆகும். அதிலும் குறிப்பாக 2020-ஆம் ஆண்டும், 2021-ஆம் ஆண்டும் கொரோனா பரவலுடன்  தொடங்கி, கொரோனா பரவலுடன் தான் நிறைவடைந்திருக்கின்றன. அதனால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களும், குறிப்பாக, ஏழை, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர்  உள்ளிட்ட அனைவரும் மனதளவிலும், உடல் அளவிலும், பொருளாதார ரீதியாகவும் அடைந்த பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.2022-ஆம் ஆண்டும் மலர்ப்பாதை விரித்து நம்மை வரவேற்பதாகத் தெரியவில்லை. ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது. மனித உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் தீவிரமாக இருக்காது என்பதைத் தவிர, ஓமைக்ரானின் மற்ற அம்சங்கள் அச்சமளிப்பதாகவே உள்ளன.

“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நம்பிக்கை தான் வாழ்க்கை. 2021ஆம் ஆண்டின் துயரங்கள் அனைத்து துரத்தி அடிக்கப்படும். அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நாம் விரும்பும் அனைத்தையும் நமக்கு அளிக்கும் என்று உறுதியாக நம்புவோம்.தமிழ்நாட்டிற்கு நன்மை நடக்க வேண்டும்; தமிழ்நாடு இதுவரை அனுபவித்த தீமைகள் அனைத்தும்  விலக வேண்டும்; வளர்ச்சியும், அதனால் மக்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும் மட்டும் தான் இனிமேல் தமிழ்நாட்டின் அடையாளங்களாக இருக்க வேண்டும். அதனால் தான் புத்தாண்டில் புதிய பாதையில்,  புதிய நம்பிக்கையுடன் பயணிக்க தீர்மானித்திருக்கிறோம்; இந்த பயணம் நமக்கு வெற்றிகளையே தரும்.இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்; அவர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள். அவர்கள் ஒன்றாக கை கோர்த்து களமிறங்கினால், தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும், ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும். அதை உறுதி செய்வதற்கு  தேவையான ஆலோசனைகளை இளைஞர்கள் படைக்கு பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும்; வழிநடத்தும்.

கடந்த இரு ஆண்டுகளில் நாம் அனுபவித்த விஷயங்கள் காரணமாக இந்த ஆண்டும் சோதனைகள் நிறைந்த ஆண்டாகவே இருக்கும் என்ற எண்ணம் பொதுவாக மக்களிடம் நிலவுகிறது. ஆனால், அதையும் கடந்து நம்மால் சாதிக்க முடியும் என்ற புதிய நம்பிக்கை தான் நமது வலிமை ஆகும். அதன் பயனாக 2022&ஆம் ஆண்டு இனிப்பாக அமையும்…. அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி  மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக – வைகோ

“2021ம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும். தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததோடு, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கருணாநிதி குறிப்பிட்ட முள்ளை அகற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய விடியலை தமிழக முதல்வர் பிரகடனம் செய்தது நூற்றாண்டு கால திராவிட இயக்கத்திற்கு ஒளி சேர்ப்பதாகும்.

ஆனால், இலங்கைத் தீவை வளைத்து, தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவந்து அநீதி விளைவிப்பதற்கு சீன அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிங்களச் சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. இதைத் தடுப்பதற்கு மத்திய அரசு சிறு துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை. ஈழத் தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் தொடர்ச்சி இன்னும் நின்றபாடு இல்லை. சிங்களவரின் அடிமை நுகத்தடியிலிருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழ் ஈழம் அமையவும், சிங்களவர் நடத்திய இனக்கொலைக்கு உரிய பன்னாட்டு விசாரணை நடைபெறவும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் 2022 உதயத்தில் சூளுரைப்போம்.

கொரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும். சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்.”

தேமுதிக – விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இன்பம் பெருகும்… துன்பம் முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்தப் புத்தாண்டில் ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும்.

நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே மிரட்டி வரும் கொடிய வைரஸ் தொற்றான கரோனாவும், தற்போது வேகமாக பரவி வரும் ஒமைக்ரானும் 2022-ல் நம்மை விட்டு விலகி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணையாக எந்த நோய்களும் அண்டாமல் மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும். இந்த ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அமமுக – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லைகளைக் கடந்து உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆங்கிலப் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும். அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் புதுவடிவமான ஓமிக்ரான் பயம் நீங்கி, ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன்.

தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலன்களையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்து மாண்புகளோடும், வலிமையோடும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இப்புத்தாண்டு விதைக்கட்டும். தொழில்களும், விவசாயமும் செழித்தோங்கி உழைக்கிற மக்கள் அனைவருக்கும் 2022 புத்தாண்டில் நன்மைகள் நிறைந்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியலை வரவேற்பது போல ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை நம்பிக்கையுடனும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

மனித குலத்தின் இயல்புகளில் ஒன்று வீழ்ச்சியிலிருந்து எழுச்சி அடைவது தான். 2020, 2021 ஆகிய ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. விழுந்தவுடன் எழுந்து இன்னும் வேகமாக ஓடுவது தான் மனிதர்களின் குணம். அது தான் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.  பேரழிவிலிருந்து மீண்டு பெருவளர்ச்சி அடைந்த ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் இதற்கு உதாரணம். அதைப்போலவே கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாம் மீண்டெழுவோம். 2022-ஆம் ஆண்டில் நாம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வெற்றிக்கொடி ஏற்ற வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.