சென்னை: டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கடற்கரைகளில், சாலைகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் 31.12.2020 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இதுவன்றி, 2021 ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 31.12.2020 அன்று இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சில வெளிநாடுகளில் கொரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற இச்சூழ்நிலையில், நோய்த் தொற்று தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
எனினும், 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கொரோனா நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அதிமுக அரசு எடுத்து வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.