சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவின் புதிய வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அது குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தற்போது கேரளாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “புதிய வகை தொற்று 3 அல்லது 4 நாள்களில் சரியாகிவிடும் என்பதால் பதற்றமடையத் தேவையில்லை. புதிய வகை தொற்று கேரளத்தில் 230 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். அங்கே பரவி கொண்டிருக்கும் தொற்றின் பாதிப்பு குறித்து கேட்டறிந்த போது, கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்பில்லை என்று அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 264 பேருக்கு பரிசோதிக்கப்பட்டது. அதில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதை கோட்டூர் canal பகுதியில் 3000 குடும்பங்களுக்கு நிவாரணப்பணிகள் வழங்கினார். தொடர்ந்து சைதை பள்ளிப்பட்டு பகுதியில் 800 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.