இந்தூர்: இந்தியாவின் புலிகள் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேசத்தில், ஏற்கனவே 6 புலிகள் சரணாலயங்கள் இருக்கும் நிலையில், தற்போது ரடபாணி புலிகள் சரணாலயம் என்ற பெயரில் ஏழாவது சரணாலயமும் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதிய சரணாலயத்திற்கான எல்லைகள் மற்றும் பகுதிகளை அடையாளம் காணும்பொருட்டு, மாநில அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்டது. இதுதொடர்பான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சினைக்குரிய வகையில் நடைபெற்று வந்தன.

ஏற்கனவே 823.065 சதுர கி.மீ. இருக்கும் பரப்பளவில், 763.812 சதுர கி.மீ. பரப்பு மையப்பகுதியாக மறுவரையறை செய்யப்பட்டு, பின்னர் மீதமுள்ள 59.253 சதுர கி.மீ. பரப்பு இடைப்பட்ட பகுதியாக இருக்கும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியின் மொத்தமுள்ள 29 வருவாய் கிராமங்களில், 26.947 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ள 9 கிராமங்கள், பாதுகாக்கப்பட்ட மையப் பகுதியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, குறிப்பிட்ட 9 கிராமங்களிலிருந்து மக்களை வேறிடத்திற்கு குடியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் ப‍ெறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் புதிய சரணாலயம் தலைநகர் போபாலுக்கு அருகில் இருப்பதால் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.