உலக கோப்பையை வெல்லப்போகும் புதிய அணி யார் ?: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து மோதல்

Must read

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டி, இங்கிலாந்தின் எட்ஸ்பாக்ஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஐந்து முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, ஆறாவது முறையாக கோப்பையை வெல்லும் பொருட்டு, அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அதேநேரம் முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியிருந்தது.

போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணி திணறியது. ரன் ஏதும் எடுக்காமல் பின்ச் வெளியேற, 9 ரன்களில் டேவிட் வார்னரும், 4 ரன்களில் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்பும் வெளியேறினர். 14 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு, ஸ்டீவன் ஸ்மித் – அலெக்ஸ் கேரே ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைக்க தொடங்கியது. இந்த ஜோடி 103 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அலெக்ஸ் கேரி 46 ரன்களில் வெளியேறி அரைசத வாய்ப்பை இழந்தார்.

இதை தொடர்ந்து வந்த மார்க் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், கம்மின்ஸ் என இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மறுபுறம் 85 ரன்களை அடித்து ரன் அவுட் முறையில் ஸ்டீவன் ஸ்மித் வெளியேறினார். இதன் மூலம் வெறும் 223 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் ஆவுட் ஆனது.

சுலபமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அபாரமாக இருந்தது. ஜேசன் ராய் – பேர்ஸ்டோ ஜோடி இணைந்து 100 ரன்களுக்கு மேல் கடந்து விக்கெட் இழக்காமல் அணியை வெற்றியை நோக்கி மிக வேகமாக அழைத்துச் சென்றனர். ஒருபுறம் ஜேசன் ராய் அதிரடியாக விளையாட, மறுபுறம் பேர்ஸ்டோ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 124 ரன்கள் எடுத்திருந்தபோது பேர்ஸ்டோ வெளியேற, அவரை தொடர்ந்து ஜேசன் ராயும் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் – இயான் மார்கன் ஜோடி, 79 ரன்களை நிதானமாக சேர்த்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றனர். இந்த வெற்றியின் மூலம் முதன் முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் போட்டியில் தீவிரம் காட்டும் என்பதால் விறுவிறுப்பான போட்டியாக இறுதிப்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், 2019ம் ஆண்டு உலக கோப்பையை வெல்லப் போவது ஒரு புதிய அணியாக இருக்கும். இதுவரை இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும், ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால், தற்போது இறுதிப் போட்டியில் மோதி புதிய அணி ஒன்று சாம்பியன் பட்டத்தை வெல்வதோடு, உலகக் கோப்பையை கோப்பற்றப்போவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article