கோவை:

விவசாயிகள் கரும்புகளை பற்றி, மொபைல் மூலம் தெரிந்து கொள்ள, ‘கரும்பு ஆலோசகர்’ என்ற புதிய மொபைல் செயலி (ஆப்) துவக்கப்பட்டுள்ளது.

கோவை வீரகேரளம் கரும்பு இனப்பெருக்க மையத்தில், விவசாயிகளுக்காக, ‘கரும்பு ஆலோசகர்’ என்ற மொபைல் செயலியை, அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. விவசாயிகள் கரும்புகளை பற்றி, மொபைல் மூலம் தெரிந்து கொள்ள, ‘கரும்பு ஆலோசகர்’ என்ற புதிய மொபைல் செயலியை, மத்திய அரசின் சர்க்கரை, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கும் அமைச்சகத்தைச் சேர்ந்த இணைச் செயலாளர் சுபாஸிஸ் பான்டா அறிமுகம் செய்துவைத்தார்.

இது குறித்து, கரும்பு இனப்பெருக்க நிலைய இயக்குநர் பக்ஸி ராம் தெரிவிக்கையில், ”இந்த கரும்பு இனப்பெருக்க நிலையம் 1912 முதல் செயல்பட்டு வருகிறது. கோவை மற்றும் இந்திய நாட்டில் பல்வேறு மாநிலங்களில், கரும்பு இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சிக்காக இந் நிறுவனம் சேவை செய்கிறது.

இந்த அமைப்பு, கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு, புதிய தொழில் நுட்ப முறைகள் மற்றும் புதிய கரும்பு வகைகளை, அறிமுகம் செய்து, கரும்பு இனப்பெருக்கத்திற்காக, பல்வேறு யுக்திகளை செயல்படுத்துகிறது.

தற்போது  “கரும்பு ஆலோசகர்” என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது. இதை,  திட்ட தலைவர் ரஜீலா சாந்தி, அவரது குழுவினர்கள் அலமேலு, ஜெயா போஸ், மாலதி ஆகியோர், 15 மாதங்களாக  உழைத்து உருவாக்கியுள்ளனர்.  விவசாயிகள், எளிமையாக பயன்படுத்தும் வகையில், இந்த செயலியை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், 5 மில்லியன் கரும்பு விவசாயிகள் உள்ளனர். இவர்களிடம், கரும்புகளைப் பற்றி நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை  நிலவுகிறது. இனி இந்த  இந்த செயலி மூலம் கரும்பு விவசாயிகள் கரும்பு நடவு செய்த தினத்தையும், எந்த மாநிலத்தை சார்ந்தவர் என்பதையும்  பதிவு செய்து கொண்டால் போதும்… நடவு செய்த நாளிலிருந்,து ஒவ்வொரு நாட்களும், என்ன என்ன செய்ய வேண்டும், எந்த வகையான பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டும் என்பதை, தங்கள் மொபைல் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

மேலும் கரும்பு வளர்ப்பு முறையில், ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், தங்களது விளை நிலத்தில், விளையும் கரும்புகளை போட்டோ எடுத்து, இந்த செயலி மூலமாக அனுப்பலாம். அதை, எங்களது நிபுணர் குழு, தகுந்த முறையில் ஆராய்ந்து, ஆலோசனைக் அளிப்பார்கள்.  மேலும், விவசாயிகள் கரும்பு வளர்ப்பு சார்ந்த கேள்விகளை, இந்த செயலி மூலமாகவே கேட்டு பதில் பெறலாம்.

விவசாயிகள், தங்களது மொபைலில் கூகுள்  பிளே ஸ்டோர் சென்று, ‘கேன் அட்வைசர்’ என்ற ஆன்ட்ராய்டு ஆப்சனில், இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

அந்த செயலியில், ஆங்கிலத்தில் கேன் அட்வைசர், இந்தி மொழியில், ‘கானாசலாகர்’ என்று இருக்கும். தமிழ் நாட்டு விவசாயிகளுக்காக, ‘கரும்பு ஆலோசகர்’ என்ற ஆப், 2 வார காலகட்டத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும். இன்றைய நவீன கால கட்டத்தில், விவசாயிகள் இந்த செயலியை பயன்படுத்துவது, வெகு எளிது. ஆகவே கரும்பு விவசாயிகள்  அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்”  என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவில், விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.