மும்பை: உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளைத் துவங்குவது மற்றும் தேசிய கிரிக்கெட் அகடமியில் நடைபெறவுள்ள பயிற்சி நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது பிசிசிஐ.
மைதானம் மற்றும் பயிற்சி வசதிகள், ஜிம்னாசியம், பிசியோதெரபி, மருத்துவ விதிமுறைகள், கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு போன்றவற்றுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
முகக் கவசம் அணிதல், ஆரோக்யா சேது செயலி, ஒப்புதல் படிவம் மற்றும் பரிசோதனை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொருவரும் தனித்தனி கை சானிட்டைசரும் வைத்திருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் 100 பக்க விவரணமாக வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சிகளை மீண்டும் துவக்குவது தொடர்பாக, பல கட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மாநில அசோசியேஷன்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் உரிய அனுமதியைப் பெறுவதுடன், முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ ஊழியரையும் பணிக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.