ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் ₹9000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS) நிறுவன ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

ஜாக்வார், லேண்ட் ரோவர் ஆகிய சொகுசு கார்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையின் மூலம் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 45000 ஏக்கர் பரப்பளவில் 50 சிப்காட்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 24,000 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 17 தொழில் பூங்காக்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலான சிப்காட் தொழில் பூங்காக்கள் சென்னை மற்றும் தூதுக்குடியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொழிற்பூங்காக்களுக்கு மொத்தம் 45,000 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ள போதும் சேலம் மாவட்டத்தில் ஜவுளித் துறைக்கு என்று சுமார் 111 ஏக்கர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த பின்தங்கிய மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு சேலம், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் சிப்காட் தொழிற்பூங்காக்களை அமைப்பது அவசியம் என்று அம்மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.