டில்லி

சிபிஎஸ்இ, ஜே இ இ மற்றும் நீட் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக சி பி எஸ் இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் சில ஒத்தி வைக்கப்பட்டன.   அதன் பிறகு  ஊரடங்கு அறிவிப்பால் இந்த தேர்வுகள் நடைபெறுவது மேலும் பல முறை ஒத்தி வைக்கப்பட்டன.  இந்த தேர்வுகள் இனி நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருந்தது.  மேலும் சில மாநில அரசுகள் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ததால் இந்த தேர்வுகளும் ரத்து செய்யலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் ஜூலை மாதம் 1 முதல் 15 வரை இந்த தேர்வுகள் நடைபெறும்  என சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது.  மேலும் ஜே இ இ தேர்வுகள் 18-23 வரை நடக்கும் எனவும் நீட் தேர்வு ஜூலை  26 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.    ஆனால் கொரோனா தொற்று மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் பல மாநில அரசுகள் இந்த தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையொட்டி மத்திய மனித வள அமைச்சகம் இந்த தேர்வுகளை மேலும் தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளும் கல்ந்துக் கொண்டனர்.  அநேகமாக நாளை இந்த் தேர்வுகளின் புதிய அட்டவணை குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.