மதுரை: தமிழ்நாட்டின் குலசேகரப் பட்டிணத்தில், புதிய விண்கல ஏவுதளம் அமையவுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், எஸ்எஸ்எல்வி விண்கலங்களை நேரடியாக தென்துருவத்திற்கு ஏவ முடியும் என்பதால், வியூகரீதியான நன்மை கிடைக்கும் மற்றும் இலங்கையை சுற்றிச்செல்ல வேண்டிய எரிபொருள் செலவும் மிச்சமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுவதாவது, “ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தென்துருவத்திற்கு விண்கலங்களை ஏவும்போது, ராக்கெட் கழிவுகள் இலங்கை மண்ணில் விழுவதைத் தவிர்க்க, அத்தீவை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், தேவையற்ற எரிபொருள் செலவு ஏற்படுகிறது. பெரிய விண்கலங்கள் எனும்போது அதிக எரிபொருள் செலவு என்பது பிரச்சினையில்லை. ஆனால், சிறிய விண்கலங்கள் விஷயத்தில் இது சாத்தியமில்லை.
ஆனால், குலசேகரப்பட்டிணம் எனும்போது, அங்கு பூகோள வசதி கிடைக்கிறது. இலங்கைத் தீவை சுற்றிச்செல்ல வேண்டியதில்லை. இதன்மூலம், கூடுதல் சுமையையும் இணைத்து அனுப்ப முடியும்.
அதேசமயம், விண்கல ஏவுதளம் என்று வருகையில், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும், குலசேகரப்பட்டிணத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது” என்றார்.