சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயிக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அதற்காக அமைக்கப்பட்டிக்கும் நியாய வாடகைக் குழு, அதற்கான வாடகையை நிர்ணயிக்கும். அதன்பிறகு, திருக்கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்கப்படும் என கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  குடமுழுக்கு நடைபெறாமல் அதிக ஆண்டுகள் நிலுவையில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய குடமுழுக்கு பணிகள் நடைபெறவில்லை என்பது இந்து சமய அறநிலையத்துறையின் குறிப்புகளில் இருந்தாலும் அந்த திருக்கோவில்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைக்கு மயிலாடுதுறை மாவட்டம், கருவாழக்கரை அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சீர்காழி அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவெண்காடு, அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மற்றும் உதவி பெறும் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரும் பள்ளம், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் ஆகியவற்றையும், தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் ஒரு கோடி ரூபாயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் கட்டப்படவுள்ள இடத்தினையும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களையும் ஆய்வு செய்தோம் என தெரிவித்த அவர், திருவாரூர் தியாராஜ சுவாமி திருக்கோயிலின் நடைபாதைகளை முழுவதுமாக கற்களால் அமைக்கப்படுகின்ற பணிக்கு சுமார் 5.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த திருக்கோயிலை சுற்றி அதிக அளவு இருள் சூழ்ந்த நிலை இருப்பதை மாற்றி முழுவதுமாக மின்சாரம் ஒளி பெறுகின்ற வகையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து சுற்று பிரகாரத்தை சுற்றிவரும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் மின்சார அமைப்புகளை முழுமையாக மாற்றி ஒளி வெள்ளத்தில் இந்த திருக்கோயில் இருக்கின்ற அளவிற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

அதேபோல் மனுநீதி சோழன் வாழ்க்கை வரலாற்றை விளக்குகின்ற அந்த மணிமண்டபம் ரூ.29லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதற்கு கூடுதலாக நிதி தேவைப்படும் எனினும் சுற்றி இருக்கின்ற அனைத்து சுவர்களையும் திருக்கோயிலின் தொன்மை மாறாமல் சுற்றுச்சுவரை எழுப்பி, தொல்லியல் துறையோடு இணைந்து பழுது பார்க்கின்ற பணியினையும் மேற்கொள்ள இருக்கின்றோம்.

கமலாலய குளம் என்ற பிரசித்தி பெற்ற இந்த குளத்தில் படிக்கட்டுகள் இல்லாத இடங்களில் ஏதாவது ஒரு வகையில் பெரும் மழை வெள்ளம் ஏற்படும் பொழுது சரிந்து வருகின்ற நிலையில் இருக்கின்றது. அதனை ஆய்வு செய்து, செப்பனிட்டு இந்த முறை திருத்தேரை ஓட்டுவோம் என்றும் கூறியிருந்தோம். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உதவியோடும் பாதையை செப்பனிட்டு திருத்தேரும் ஓடியிருக்கிறது.

இன்றைய சுற்றுப்பயணத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், நிவேதா எம். முருகன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கௌதமன், சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர் அவைகள் அனைத்தை யும் நிறைவேற்றுகின்ற முயற்சியை இந்து சமய அறநிலைத்துறை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயம் செய்வது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது அதனை ஒழுங்குபடுத்தும் விதமாக நியாய வாடகைக் குழு (Fair Rent Committee) ஒன்றை அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதில் நமது தலைமைச் செயலாளர் அவர்கள் இடம் பெற்றிருக்கின்றார். மேலும் ஓய்வு பெற்ற 2 கூடுதல் ஆணையர்கள் 2 இணை ஆணையர்களும் இடம் பெற்றிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வாடகை குறைவாக இருக்கின்றது, ஒரு சில இடங்களில் வாடகை மிக அதிகமாக இருக்கின்றது. இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனத்தெரிவித்த அவர், முதலமைச்சர் ஆணையைப் பெற்று, நியாய வாடகைக் குழு என்ன வாடகையை நிர்ணயிக்கிறதோ அது வசூலிக்கப்படும். அந்த வாடகை குடியிருப்பவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.